பக்தைக்காக வாதிட்ட சிவபெருமான் - அக்னிபுரீஸ்வரர்
சென்னை அருகே உள்ள திருக்கழுக் குன்றம் திருத்தலத்திற்கும், மதுராந்தகத்திற்கும் இடையே உள்ளது வழுவதூர் என்ற ஊர். இங்கு சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவ ஆலயம் ஒன்று உள்ளது.
இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் இறைவன், ஒரு பெண் பக்தைக்காக வாதிட்டவர் என்பது இத்தலத்தின் சிறப்பு.
இறைவனின் திருநாமம் அக்னிபுரீஸ்வரர் என்பதாகும். இறைவியின் பெயர் சவுந்தரியநாயகி என்பதாகும்.
ஒரு முறை திருக்கழுக்குன்றத்தில் வசித்த ஒரு பெண், சில வீடுகளில் வேலை பார்த்து வாழ்க்கை நடத்தி வந்தார். அவளது கணவன் அந்த ஊரைச் சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தான். ஆனால் அந்தத் தொகையைக் காட்டிலும் நான்கு மடங்கு பணம் கொடுத்த பின்னரும் கூட, வட்டி கொடுத்தவர்கள் அந்தப் பெண்ணின் கணவனை துன்புறுத்தி வந்தனர். இதனால் மனமுடைந்த அந்தப் பெண், அந்தப் பகுதியைச் சேர்ந்த வழக்காடு மன்றத்தில் புகார் அளித்தாள்.
ஆனால் வழக்கை விசாரித்தவர்கள், பணம் இருந்தவர்களின் பக்கம் நின்றனர். இதனால் அந்தப் பெண்ணுக்கும், அவளது கணவனுக்கும் நீதி கிடைக்கவில்லை.
இறைவனிடம் தன்னுடைய நிலையை கூறி அழுது புலம்பினாள்.
அன்றைய தினம் அந்தப் பெண்ணின் கனவில் தோன்றிய இறைவன், ‘கலங்காதே! நீ மீண்டும் அதே வழக்காடு மன்றத்தில் போய் புகார் கொடு. வெற்றி உன் பக்கம் வந்து சேரும். தைரியமாகப் போ’ என்று சொல்லி மறைந்தார்.
அதன்படியே அந்தப் பெண்ணும் மீண்டும் புகார் கொடுத்தாள். வழக்கை விசாரிப்பதற்காக அனைவரும் கூடியிருந்தனர். அப்போது இறைவன், வழக்காடுபவர் வடிவில் அந்த மன்றத்திற்குள் நுழைந்தார். அப்போது தவறு செய்தவர்களான, வட்டி வசூலிப்பாளர்களால் அந்த இடத்தில் இருக்க முடியவில்லை. அவர்கள் அனல் மேல் நிற்பது போல் துடிதுடித்தனர். அங்கிருந்து எழுந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து இறைவன் அந்த மன்றத்தில் தன்னுடைய தரப்பு வாதத்தை வைத்து அந்தப் பெண்ணுக்கு நீதி வாங்கிக் கொடுத்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த ஊர் பெரியவர்கள், ‘உங்களை இதற்கு முன்பு நாங்கள் இங்கே பார்த்ததில்லையே.. நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று கேட்டனர்.
அதற்கு இறைவன், ‘நான் யார் என்று தெரிய வேண்டும் என்றால், இங்கிருந்து ஐந்து கல் தொலைவில் உள்ள ஆலயத்திற்கு வாருங்கள்’ என்று கூறினார்.
ஊர் பெரியவர்களும், ஊர் மக்களும், புகார் கொடுத்த பெண் உள்ளிட்ட அனைவரும் வாதாட வந்தவருடன் சென்றனர். ஆலயம் வந்ததும் இறைவன் அக்னி பிழம்பாக மாறி நின்றார். இதையடுத்து வழக்காட வந்தவர் இறைவன் என்பதை உணர்ந்த அனைவரும் ஆச்சரியத்துடன், உள்ள மகிழ்வுடனும் இறைவனின் சன்னிதி முன்பாக விழுந்து வணங்கினர். ஆனாலும் அக்னி பிழம்பாய் நின்ற இறைவனின் வெப்பம் அனைவரையும் வாட்டியது. உடனடியாக அவற்றை தன் சக்தியால், இறைவன் குளிர்வித்தார். அக்னி பிழம்பாக இறைவன் நின்றதால், ‘அக்னிபுரீஸ்வரர்’ என்று பெயர் பெற்றார்.
சென்னை அடுத்த மதுராந்தகம்– திருக்கழுக்குன்றம் சாலையில் வழுவதூர் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு செல்ல பஸ் வசதிகளும், ஷேர் ஆட்டோ வசதிகளும் இருக்கின்றன.
YouTube Group
👇👇👇👇
- Easanai Theadi - YouTube Group
- Madambakkam Dhenupureeswarar Temple |1000+ Years Temple|Hindu temples| India|தேனுபுரீஸ்வரர் கோயில்
Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
03 Sep 2023 | Sun | 14:54:06 PM IST