ஏழுசெம்பொன் ஞானசௌந்தரி அம்பாள் உடனுறை தென் திருக்காளத்தீஸ்வரர் ஆலயத் திருக்கும்பாபிஷேகம்

அன்பு நண்பர்களே,

உங்கள் அனைவருக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள். எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால், அவர் சித்தம் கொண்டபடி, இன்றைய தினம் 01 செப்டம்பர் 2022 வியாழக்கிழமை ஞானசௌந்தரி அம்பாள் உடனுறை தென் திருக்காளத்தீஸ்வரர் ஆலயத்தில் அனைத்து தெய்வங்களுக்கும் - விநாயகர், முருகப்பெருமான் , சிவபெருமான், தேவியார், காலபைரவர், நவக்கிரகங்கள், கைலாச நாதர், பரிவார மூர்த்திகள் அனைவருக்கும் மிக நல்ல முறையில் திருக்கும்பாபிஷேகம் மிக இனிதே நடைபெற்றது. அடியேனும் எனது குடும்பத்தாருடன் நேரில் சென்று கண்டு களிக்கும் பெரும்பாக்கியம் பெற்றேன்.

ஏழுசெம்பொன் ஊர் மக்கள் அத்துணை பேரும் பெருந்திரளாகக் குழுமியிருந்தனர். கும்பாபிஷேகக் கூட்டம் என்ற உவமை மிகச் சரியான பொருத்தம். காவல் துறை அதிகாரிகள் சுமார் ஒரு 20 பேர் கூட்டத்தை ஒழுங்கு செய்யும் பணிக்கு நல்ல ஒத்துழைப்பு நல்கினர். வருண பகவானும் அவர் கருணையினை வாரி வழங்கினார்.. நல்ல மழை .. நல்ல ஆசீர்வாதம் !! அன்பர்களுக்கு அன்னதானமும் மிக நல்ல முறையில் வழங்கப் பெற்றது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் மிக நேர்த்தியாக நேரடி ஒளிபரப்பும் இணைய வழியே YouTube ல் பகிரப்பட்டது. https://www.youtube.com/watch?v=lXzwnjsQCgY.

இத்திருக்கோவில் கும்பாபிஷேகப் பணி சுமார் ஒரு மூன்றரை ஆண்டுகளாக பல சிக்கல்களுக்கு மத்தியில் நடைபெற்றது. இம் மாபெரும் பணிக்கு மிக நல்ல முறையில் ஒத்துழைப்பும் பலவகையில் ஒத்துழைப்பும் உறுதுணையும் நல்கிய ஏழு செம்பொன் கிராம மக்களுக்கும், திரு சிவ ரமேஷ் ஐயா , திரு கணேசன் ஐயா (வாத்தியார்) அவர்களுக்கும் மற்றும் திருப்பணிக்குழுவுக்கும் , மேலும் எனது நண்பர்கள் , குடும்பத்தார், உறவினர்கள் அத்துணை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இறைவன் திருவுளத்திற்கு அடுத்தபடியாகத் துணை நின்றது உங்கள் அத்துணை பேரின் நல்லாசிகளும், வாழ்த்துக்களும், காணிக்கையும் என்பதில் எள்ளளவும் மிகையில்லை. ஊர் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிய நல்லுங்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும், வணக்கத்தினையும் தெரிவித்தனர்.

எல்லாம் வல்ல எம்பெருமான் நம் அனைவருக்கும் தத்தம் குடும்ப உறுப்பினர்களுக்கும் நல்லதொரு ஆரோக்கியத்தையும், நோயில்லாத வாழ்வும், நீடித்த செல்வமும் , குறைவில்லாத சந்தோஷத்தையும், மன நிம்மதியையும் வாரி வழங்குமாறு வேண்டி விரும்பி விண்ணப்பம் வைத்துள்ளேன்.

இன்றைக்கு நேரில் ஆலயத்திற்கு வந்து கும்பாபிஷேக வைபோகத்தைக் கண்டு களிக்க இயலாதவர்கள், ஒரு மண்டலம் அதாவது 48 நாட்களுக்குள் வந்து தரிசித்தால், கும்பாபிஷேகத்தை நேரில் தரிசித்த புண்ணியம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு மற்றும் நம்பிக்கை. தயவு செய்து ஒரு முறை சென்று இறைவனார் மற்றும் தேவியரின் தரிசனம் பெற்று வருமாறு வேண்டுகிறேன்.

மிக நல்ல , கண்ணுக்கினிய பசுமையான பிரதேசம் எழுசெம்பொன் கிராமம். சுற்றிலும் வயல்வெளி, இயற்கையோடு இணைந்த சூழல், விவசாய நிலம் மற்றும் வெள்ளந்தி மக்கள்.. நிச்சயம் உங்கள் கண்களுக்கும், மனதிற்கும் நல்ல இதமான ஒரு பயணமாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பு

கும்பாபிஷேகம் முடித்த 48 நாட்களுக்கு தொடர்ந்து, பூசை புனஸ்காரம் தொடர்ந்து செய்ய வேண்டும். பின் வரும் காலத்திற்கும், தொடர்ச்சியாக எல்லா தெய்வங்களுக்கும் நல்ல முறையில் வழிபாடு செய்ய வேண்டும்.. அதற்கும் மெய்யன்பர்கள் தங்களால் இயன்ற உதவியினைச் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இவண் ,
இராகவன் என்ற சரவணன் முத்து.
காரைக்குடி
01 செப்டம்பர் 2022 வியாழன் இரவு 7 20 மணி இந்திய நேரப்படி.

Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
01 Sep 2022 | Thu | 19:26:05 PM IST