அந்தக் காலத்தில் TVS பஸ் நிறுவனம் தான் தமிழகமெங்கும் பஸ் போக்குவரத்தை நடத்தி வந்தார்கள் என்று கேள்விப்பட்டதோடு TVS பஸ் முதலாளியைப் பற்றி கடந்த வாரம் எனது மரியாதைக்குரியவர் மூலம் மிகவும் அற்புதமான விஷயம் ஒன்றைக் கேட்டேன் ! அந்த நிறுவனம் இத்தனை நூற்றாண்டுகளாகப் புகழ் வாய்ந்து பெரிய அளவில் உயர்ந்து நிற்க அது தான் காரணம் !

ஒரு முறை TVS பஸ் முதலாளியின் மகன் அந்த பஸ்ஸில் பயணம் செய்தபோது அவரிடம் டிக்கெட் எடுக்க அந்த பஸ்ஸின் கண்டக்டர் வந்த போது TVS முதலாளியின் மகன் மிகவும் கோபப்பட்டாராம் !

நான் இந்த பஸ் முதலாளியின் மகன் என்பது உனக்குத் தெரியுமா ? என்று கேட்டவரிடம் அந்தச் சாதாரண கண்டக்டர் சொன்னாராம் மிகவும் அமைதியாக " தெரியும் அய்யா ! ஆனால் பஸ்ஸில் பயணம் செய்யும் அனைவரிடமும் டிக்கெட் வாங்க வேண்டும் என்பது எனக்கு வழங்கப்பட்ட சட்டம் !

டிக்கெட் வாங்காவிட்டால் தங்களை இங்கேயே இறக்கி விட வேண்டியிருக்கும் " , என்ற கண்டக்டரிடம் கோபமாக டிக்கெட் வாங்கி விட்டு பயணம் செய்தாராம் அந்த பஸ் கம்பெனியின் முதலாளி மகன் !

நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்ட TVS முதலாளி மிகுந்த கோபத்தோடு அந்த கண்டக்டரை நாளை அலுவலகத்தில் வந்து என்னைப் பார்க்கச் சொல்லுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார் !

அன்று இரவு மிகவும் கவலையோடு வீட்டுக்கு வந்த அந்தக் கண்டக்டர் தனது ஏழைத் தாயின் மடியில் தலை சாய்த்துக் கொண்டு " நாளை முதல் எனக்கு இந்த வேலையும் போய்விடும் ! என்ற மகனிடம் அந்த ஏழைத் தாய் சொன்னார்கள் " மகனே எந்த நிலை வந்தாலும் கடமையை நேர்மையாகச் செய் , மற்றதைக் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று !

மறுநாள் மிகுந்த பயத்தோடு முதலாளியின் அறைக்கு சென்றவரை மிகவும் அன்பாகத் தன்னோடு அணைத்துக் கொண்ட TVS முதலாளி " இன்றிலிருந்து என் பஸ் கம்பெனியின் Checking Inspector ஆக ( செக்கிங் இன்ஸ்பெக்டர் ) உன்னை நியமிக்கிறேன் ! முதலாளியின் மகன் என்று கூட பயப்படாமல் உனது கடமையைச் சரியாகச் செய்த உன்னைப் போன்றவர்கள் தான் இங்கே அதிகாரியாக இருக்க வேண்டும் " என்ற போது தனது தாயின் வார்த்தைகள் எத்தனைப்பெரிய வேதம் என்று மகிழ்ந்த அவர் பின்னாளில் பல பஸ் கம்பெனிகளுக்கு முதலாளியானார் !

" ஆளைப் பார்த்து வேலை செய்வதும் , அதிகாரங்களைக் கண்டு நேர்மையைக் கைவிடுவதும் , அல்லது கண்டு கொள்ளாமல் நமக்கென்ன நம்ம குடும்பம் வாழ்ந்தால் போதும் என்று அவர்களுக்குக் கும்பிடு போட்டு வேலை செய்கிறவர்கள் சுயநலவாதிகள் !

நேர்மையாகத் தங்களது பணியைச் செய்பவர்களை பணிசெய்ய விடாமல் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி ஆணவம் கொள்பவர்கள் உயிரோடு நடமாடும் பிணங்கள் !

கோடிகோடியாக பணம் இருந்தாலும் வனளாவிய அதிகாரங்கள் இருந்தாலும் உள்ளுக்குள் நிம்மதியை இழந்து வாழும் பரிதாபத்துக்குரியவர்கள் !

யார் பார்க்காவிட்டாலும் ஆண்டவன் பார்க்கிறார் என்று தங்கள் கடமையை நேர்மையாகச் செய்பவர்கள் கெட்டுப் போனதாக வரலாறுகள் இல்லை !

உழைப்போம் நேர்மையாக , பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் ! கடமையைத் துணிவோடு செய்வோம் பாரபட்சம் இல்லாமல் ! நிச்சயமாக மன நிறைவான வாழ்க்கை அமைந்தே தீரும் !

Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
26 Apr 2022 | Tue | 11:02:37 AM IST